Friday 12 February 2016

தலித் துணைவேந்தரைத் தேடி…

ஜெ.பாலசுப்பிரமணியம்

நான்கு வருடங்களுக்கு முன்பு 6 ஜூலை 2011 அன்று த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டது அந்த செய்தியின் தலைப்பு ‘Not Many Dalits Become VCs’ என்பதுதான். அதில் தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்களில் அப்போது துணைவேந்தர்களாக பதவி வகித்தவர்களின் சாதிவாரி பட்டியல் ஒன்றும் தரப்பட்டிருந்தது.  அதில் முற்பட்ட வகுப்பினர் 10 இடைநிலை சாதியினர் 14 பேரும் தலித்துகளில் ஒருவர்கூட இல்லை என்பதை தெரிவித்தது. இந்த செய்தி மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது துணைவேந்தர் பதவிகள் காலியாகவிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தலித் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்பதை தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதே அந்த சுவரொட்டியின் நோக்கமாக இருந்தது. அதன்பிறகு பல்வேறு பலகலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் ஆனால் அதில் ஒருவர் கூட தலித் இல்லை. தற்போது தமிழகத்தின் ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்குத் தகுதியான நபரைத் தேடும் பணியைத் துணைவேந்தர் தேடுகுழு மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது எதிர்ப்பை சிண்டிகேட் கூட்டத்திலேயே பதிவு செய்திருக்கிறார். அடுத்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் தேடுகுழுவிற்கான உறுப்பினரை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அதில் பணி நியமனம், இடம் மாறுதல், புதிய கல்லூரிக்கான அங்கீகாரம் என அனைத்து முடிவுகளையும் துணைவேந்தரே எடுப்பார். இதுபோன்ற அதிகாரக் குவியல்தான் துணைவேந்தர் பதவிக்கு இவ்வளவு போட்டியும் சர்ச்சையும்.



துணைவேந்தர் தேடுகுழு

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தரை நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கும் பொருட்டுத் தேடுகுழு ஒன்று அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழகப் பேரவை (senate) உறுப்பினர்கள் ஒருவரையும், பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்கள் ஒருவரையும் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் பல்கலைக்கழகத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டவராக இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுவார், இவரே தேடுகுழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். இந்தத் தேடுகுழு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அதில் மூவரைத் தெரிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைப்பார்கள். இதில் ஒருவரைத் துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்வார். இதுவே தமிழகத்தில் பல்கலைகழகங்களுக்குத் துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் முறை. மேலோட்டமாகப் பார்க்கும்போது எல்லாமே முறையாக நடப்பதாகவே தோன்றும், ஆனால் நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. தேடு குழுவிற்கான பொதுவான சட்டங்கள், வழிகாட்டுதல்கள் என ஏதும் தமிழகத்தில் வரையறுக்கப்படாதச் சூழலில் ஒவ்வொரு பல்கலைக்கழகத் தேடுகுழுவும் தன்னிச்சையாக முடிவு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் படைத்ததாகிறது. உதாரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான வயதுவரம்பு என்ன என்று இதுவரை முடிவாகவில்லை. பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) விதிப்படி துணைவேந்தருக்கான அதிகப்பட்ச வயது எழுபது. ஆனால் வேளாண் பல்கலைக்கழக விதி (Statute) வயது வரம்பு குறித்து ஏதும் குறிப்பிடாத நிலையில், வயதுவரம்பை உறுதிபடுத்தக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாகத் துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படையான அரசியல் தலையீடு கண்கூடாகத் தெரிகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். அமைச்சர்களின் நேரடி உறவினர்கள், கட்சிக்காரர்கள், தனியார் கல்லூரிகளை நேரடியாகவோ பினாமி மூலமோ நடத்தக்கூடிய பெரும் பணக்காரர்கள், சாதி பலம் கொண்டவர்கள் போன்றவர்களே துணைவேந்தராக வரமுடியும் என்ற நிலைக்குத் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஒரு ஆட்சியில் அமைச்சரின் மருமகன் என்றால் மற்றொரு ஆட்சியில் அமைச்சரின் மருமகள் என்று போகிறது துணைவேந்தர் பதவிகள்.

துணைவேந்தர் நியமனத்திற்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. யூ.ஜி.சி 2010 விதியின்படி பத்து ஆண்டுகள் பேராசிரியராகவோ அல்லது அதற்கு இணையான கல்லூரி முதல்வர், ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவோ பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே. உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில், துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசின் வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லாத நிலையில் மத்திய அரசு ஏற்படுத்திய விதிகளையே பின்பற்ற வேண்டும்; மேலும் பேராசிரியர்கள் நியமனத்திலும் சம்பள நிர்ணயத்திலும் யூ.ஜி.சி. விதியை பின்பற்றிவிட்டு, துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் வசதியாக யூ.ஜி.சி. விதியை மறப்பது அபத்தமாக உள்ளது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன். ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது ரத்து பெறப்பட்டு பதவிக்காலத்தையும் முடித்துச் சென்றார் அந்தத் துணைவேந்தர். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சி. விதியைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.




தலித் ஒருவரை கண்டடையுமா?

    தமிழகத்தில் தற்போது இருபது பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 1957இல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் முதல் 2012இல் தொடங்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம் வரை இதில் அடங்கும். இப்பல்கலைகழகங்களில் எல்லாம் இதுவரை துணைவேந்தர்களாகப் பதவிவகித்தவர்களைக் கணக்கிட்டால் 150க்கு மேல் வரும். ஆனால் தமிழக வரலாற்றில் இதுவரை வெறும் ஆறு தலித்துகளே துணைவேந்தர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். இதுவரை பதவி வகித்த தலித் துணைவேந்தர்கள்: சாந்தப்பா (சென்னைப் பல்கலைக்கழகம்), மாரியப்பன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), ஜெகதீசன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), முத்துகுமாரசாமி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), பாலகிருஷ்ணன் (பெரியார் பல்கலைக்கழகம்), காளியப்பன் (அண்ணா பல்கலைக்கழகம்-திருநெல்வேலி). அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியை மட்டுமே பார்த்தால் இன்னும் எத்தனையோ தலித்துகள் துணைவேந்தர்களாகியிருக்க முடியும். ஆனால் துணைவேந்தர் பதவி என்பது அரசியல் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பதவி என்றாகிவிட்டதால் பொது அரசியலில் புறக்கணிக்கப்படும் தலித்துகள் உயர் அரசு பதவிகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசியலில் ஏற்படும் வெற்றிடம் எல்லாத்துறைகளிலும் பிரதிபலிக்கிறது. திராவிட ஆட்சிகளில் தலித்துகளுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவிகள் ஆதிதிராவிட நலத்துறை, கால்நடைத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை, துணைசபாநாயகர், சபாநாயகர் போன்ற முக்கியத்துவமில்லாத துறைகளே ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய தலித்துகளே இருக்கின்றனர். இந்த அரசியல் வெற்றிடமே தலித்துகளுக்கான பேர பலம், சிபாரிசு பலம் போன்றவை இல்லாமல் போகிறது. இது வெறும் இடஒதுக்கீட்டுப் பிரச்சனை அல்ல. ஒரு துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு நிகழ்கால உதாரணம் இந்தத் துணைவேந்தர் பதவிகள்.


சுதந்திர தமிழகத்தில் எத்தனையோ துணைவேந்தர்கள் வந்துபோனாலும் தலித்துகளுக்கு மட்டும் ஏன் இந்தத் வாய்ப்பு தடைபடுகிறது? யூ.ஜி.சி. விதியைப் பின்பற்றவில்லை என்பதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தலித்துகளுக்கு இடமில்லை என்பதை எந்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது?

இந்தக் கட்டுரை ஒரு வடிவம் தி இந்து நாளிதழில் வெளியானது
  (http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/article8197005.ece)

Tuesday 2 February 2016

கலக்கிட்ட வாத்தியாரே

கலக்கிட்ட வாத்தியாரே
திரை பிம்பம் எனும் பொறியில் சிக்கிய தமிழர்கள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

       எம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap: M.G. Ramachandran in Film and Politics புத்தகம் 1992 ஆம் ஆண்டு SAGE பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. The Image Trap எனும் ஆங்கிலத் தலைப்பை “பிம்பம் எனும் பொறி” என்று மொழி பெயர்தாலும் அதை விளக்கினால்தான் அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியும். கதாநாயக பிம்ப உருவாக்கத்தின் மூலம் சாமானிய தமிழர்கள் எவ்வாறு பொறியில் சிக்கினார்கள் என்பதை விளக்கும் புத்தகம். பாண்டியன் அரசியற் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதால் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் மாநிலத்தின் வருமானம் அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பங்கு என்ன போன்ற புள்ளி விபரங்களை வைத்து ஆய்வை விளக்குகிறார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மாநில வருமானத்தின் பெரும்பகுதி (60%) விற்பனை வரி மூலம் ஈட்டப்படுகிறது. இந்த வரி பெரும்பாலும் நடுத்தரவர்க்க மக்கள் வாங்கும் பொருட்களிலிருந்தே (சோப்பு, மருந்து பொருட்கள்) பெறப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்களில் மட்டுமே முக்கியத்துவம் தருவதால் மாநில அரசின் உள்நாட்டு வரியில் அவர்களின் பங்கு முக்கியமாகும். மாநிலத்தின் மொத்த வருமானத்தில்1980-ல் 1 சதவீதமாக இருந்த உள்ளூர் வரி கள்ளுக்கடை சாராயக்கடைகள் திறந்ததன் மூலம் 13.9 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் செலுத்தும் நில வர், விவசாய உற்பத்தி வரி போன்ற நேரடி வருமானம் 4.6 சதவீதத்திலிருந்து (1975) 1.9 சதவீதமாக குறைந்தது. இதற்கு காரணம் வசதி படைத்தவர்கள் வர்விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாமலும் இருந்தனர். இப்படி பெறப்பட்ட வருமானத்தின் சிறிய பங்கு இலவச மதிய உணவு, இலவச பல்பொடி என்று ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் பெரும்பகுதி மானியமாக நிலவுடமையாளர்களுக்கு இலவச மின்சாரம், நீர்பாசன திட்டங்கள் என்று செலவிடப்பட்டன. இந்த புள்ளி விவரங்கள் நிரூபிக்கும் விசயம் என்னவென்றால் ஏழைகளின் இதயக்கனி என்று போற்றப்படும் எம்ஜிஆரின் ஆட்சி என்பது ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிகட்டும் விதமாக பணக்காரர்களிடமிருந்து வரிகளை பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை செய்யாமல் ஏழை மக்களின் மிச்ச சொச்ச பணத்தையும் வரியின் மூலம் வசதிபடைத்தவர்களுக்கு திருப்பியது. எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பாதகமான பல விசயங்களை பட்டியலிடுகிறது பாண்டியனின் புத்தகம். பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது இந்த அரசு. இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன, காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர். விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது. 1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. இதைத் தழிவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது.




      மேற்சொன்ன பாதகமான பலவிசயங்களுக்கு ஒரு மாநிலத்தின் முதல்வராக எம்ஜிஆருக்கு பொறுப்பு உண்டு. ஆனால் அன்று மக்களிடம் எம்ஜிஆரின் செல்வாக்கு இம்மியளவும் குறையவில்லை. இதன் பின்னனி அவரின் 40 வருட திரை வாழ்க்கையில் அவர் நடித்த 136 திரப்படங்களில் இருக்கிறது. எம்ஜிஆரின் இந்த ஏழைகளின் நண்பன் எனும் செல்வாக்கு முழுக்க திரைபிம்பத்தின் மூலம் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கை கண்டியில் பிறந்து நாடகக் கலைஞராக தொடங்கி 1936-ல் சதிலீலாவதி மூலம் திரையில் அறிமுகமானார். 1953-ல் திமுகவில் சேர்ந்த பின்பு அவரது படங்கள் அரசியல் பேச ஆரம்பித்தன, 1962-ல் அவர் சென்னை சட்டமன்ற எம்.எல்.சி ஆனபின்பு பிரச்சார சினிமா உத்தி கையாளப்பட்டது. அவரது படங்களின் மையக்கரு ஏழைகளின் மீட்பராக உருவாக்கப்பட்டது. விவசாயி படத்தில் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லன் அதை தடுக்கும் கதாநாயகன் (மன்னிக்கவும் எம்ஜிஆர்). எங்கவீட்டுப்பிள்ளையில் பணக்கார கோழை எம்ஜிஆரை கொடுமைபடுத்தும் வில்லன், அதை தடுக்கும் வீரமான ஏழை திருட்டு எம்ஜிஆர். படகோட்டியில் ஏழைகளை உறிஞ்சும் வட்டிக்காரர்கள் அதில் ஏழைகளை காப்பாற்றும் படித்த வீரமான எம்ஜிஆர். இப்படி தீயசக்திகளை தனது தனிமனித சாதனைகள் மூலம் முறியடித்து ஏழைகளை காப்பாற்றும் எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். எம்ஜிஆரின் படங்கள் மூன்று விசயங்களை மய்யப்படுத்துகிறது அதாவது ஒன்று, அநீதி ஒன்றை கட்டமைத்து அதை வன்முறை மூலமாக அடித்து நொறுக்கி நீதி வழங்கும் எம்ஜிஆர்,  இரண்டு, எவ்வளவு கஷ்டப்பட்ட அல்லது கிராமத்து குடும்பத்தை சேர்ந்த கதாநாயகனாக இருந்தாலும் படித்து அறிவாளியாக உள்ள எம்ஜிஆர், மூன்று, எப்பேர்பட்ட பணக்கார, உயர்சாதி, படித்த, அழகான, கர்வம் பிடித்த பெண்ணாக இருந்தாலும் அதை அடையும் எம்ஜிஆர். இப்படி அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்படும் நீதி, கல்வி, காதல் அனைத்தையும் அந்த மக்களின் பிரதிநிதியான எம்ஜிஆர் அடைகிறார். இப்படி இருந்ததால்தான் முன்வரிசையில் மணலை கூட்டிவைத்து டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ஒரு பார்வையாளன் ‘நம்மாளு கலக்கிடாருப்பா’ என்று சொல்ல முடிந்தது. எம்ஜிஆர் படங்களில் பெண்கள் குறித்த சித்த்ரிப்பு மிகவும் பிற்போக்காக இருந்தது. விவசாயி படத்டின் “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள; இங்கிலீஸீ படிச்சாலும் இந்த தமிழ் நாட்டுல” என்ற ஒரு பாடல் இதற்கு உதாரணம் போதும். உலகம் சுற்றும் வாலிபனின் நிலவு ஒரு பெண்ணாகி என்று தொடங்கும் பாடலில் “மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க” என்ற பாடல் பெண்ணுடல் வர்ணிப்புக்கு மற்றொரு உதாரணம்.


      தமிழகத்தில் சினிமா ஒரு வெகுஜன ஊடகமவதற்கு சாதகமான பல காரணிகளை கூறமுடியும். இங்கிருந்த நாடக, கூத்து மரபு. இந்தியாவிலேயே அதிகமான திரையரங்குகள் தமிழ்நாட்டில்தான் இருந்தன, 1986-ல் 2,153 திரையரங்குகள் இருந்தன இதில் டூரிங்க் டாக்கீஸ்களின் எண்ணிக்கை 320. இங்கிருந்த நாட்டுபுற கலைகளில் இருந்த சாதி வேற்றுமை என்பது திரையரங்குகளில் கிடையாது, யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் உட்காரலாம். திரையரங்கில் அனைவரும் சமம். திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளும் மிகவும் குறைவாகவே இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்கள்தான் இன்றைய கட்டவுட், பாலபிஷேகம், கைகளில் கற்பூரம் ஏற்றுவது போன்ற எல்லா சடங்குகளுக்கும் முன்னோடிகள். திரைப்படமும் இந்துமத சடங்குகளும் இணைந்தன. சரி சினிமா ஒருவரை கதாநாயகர் என்று சொல்கிறது என்றால் மக்கள் ஏன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்த ஒரு புதிய பண்பாட்டு வரவும் இங்குள்ள பண்பாட்டுடன் இணைவது அல்லது போலச்செய்வது மூலமே மக்களோடு இணைய முடிந்தது. அதாவது கதாநாயக போற்றுதல்/வழிபாடு என்பது ஏற்கனவே தமிழ் மரபில் வாய்மொழி மரபுக்கதைகளாக நிலவிவந்த ஒன்றுதான். சாகசங்கள் புரிந்த பலியாகி அடித்தட்டு மக்களின் நாட்டுப்புற கதாநாயகர்களான காத்தவராயன், முத்து பட்டன், சின்னதம்பி, மதுரை வீரன் போன்ற கதைகளின் மூலம் புரிந்து இந்த மரபை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் எம்ஜிஆரின் திரைப்படங்கள் இந்த நாட்டுப்புற கதாநாயகர்களின் அப்படியே பிரதிபலிக்கவில்லை அதாவது நாட்டுபுற கதாநாயகர்களை வழிபடும் மக்களும் அந்த கதாநாயகனும் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு திரை கதாநாயகன் இல்லாதவனாக இல்லை. இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்தாலும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சில தன்னிடம் உள்ளவனாக இருக்கிறான். மக்கள் சார்ந்த செயல்பாட்டிலிருந்து பிரித்தெடுத்து எல்லாம் பெற்ற தனிநபர் இந்த மக்களை மீட்பார் என்றே திரையில் காட்டப்பட்டது. ஒரு தாழ்ந்த சாதி அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது உழைப்பு சுரண்டப்பட்ட ஒரு பார்வயாளன் தன்னை எம்ஜிஆர் தனது வீரத்தின் மூலம் மீட்பார் என்று நம்பினான். அதாவது மானத்தை வீரத்தின் மூலம் காப்பாற்றுவது, குறிப்பாக பெண்களின் மானத்திற்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எம்ஜிஆர் சண்டையிட்டு காப்பாற்றுவது. அதையும் மிகவும் சாதாரணமாக செய்வது, அதாவது ஆயுதமுள்ள வில்லனிடம் நிராயுதபணியாக சண்டையிடுவது, ஒரு கையை பின்னால் மடக்கிக் கொண்டு ஒற்றைக் கையால் சண்டையிடுவது, சிலம்பம் சுற்றுவது என்று அவரின் வீரம் செலுமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது.




       எம்ஜிஆரின் படத்தில் அவர் வெல்லமுடியாதவராக சாகாவரம் பெற்றவராக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்பினர்.1962-ல் வெளியான பாசம் எனும் படத்தில் எம்ஜிஆர் பாத்திரம் இறந்துபோனதால் அந்தப்படம் தோல்வி அடைந்தது. கம்பீரமாக கையை மடித்து விட்ட சிகப்பு சட்டை, அதிகாரம் படைத்த வில்லன்களுக்கு சவால் விடும் வசனம், கையை மார்பில் கட்டி நிமிர்ந்து நிற்கும் உடல் மொழி இப்படி ஒவ்வொரு விசயங்களும் அவர் மக்களை காப்பற்ற வந்தவர் என்பதை சொல்வதாக அமைந்தன. எம்ஜிஆர் என்ற தனி மனிதன் என்பதைத் தாண்டி எம்ஜிஆர் எனும் கருத்து (Idea) உருவானது. இந்த கருத்து உருவாக்கத்தில் பாடல்கள் மிகவும் முக்கியபாத்திரம் வகித்தன. மலைக்கள்ளன் படத்தின் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே”, உழைக்கும் கரங்கள் படத்தின் “உழைக்கும் கைகளே; உருவாக்கும் கைகளே” நம்நாடு படத்தின் “வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யாஇந்தப் பாடல்கள் எல்லாம் அதை எழுதிய கவிஞர்களால் அறியப்படாமல் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. இது அவர் மக்களுக்கு சொல்லும் செய்தியாக பார்க்கப்பட்டது. எம்ஜிஆருடன் உணர்வுரீதியாக மக்கள் பிணைக்கப்பட்டனர். இந்தப்பாடல்கள்தான் இன்றளவும் அ.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரப்பாடல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்சியாக அகில இந்திய எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பின்பு ரசிகர்கள் கட்சி தொண்டர்களானார்கள். 1977-ல் தொண்டர்கள் எம்.எல்.ஏக்களானர், மந்திரிகளானார்கள். அதிலிருந்து 11 ஆண்டுகள் அ.தி.மு.க. செல்வாக்கு என்பது எம்ஜிஆரின் செல்வாக்காகவே நிலைத்தது. திமுக பலமுறை அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டியும் எம்ஜிஆரை எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால் தாமாகவே முன்வந்து கருப்பு பணத்தை ஒப்படைக்கும் திட்டத்தில் எம்ஜிஆரே முன் வந்து தன்னிடமுள்ள 80 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். எம்ஜிஆர் எனும் தனி நடிகர் தமிழ் மக்களின் மீட்பர் எனும் கருத்தாக மாறிப்போனார். 24 டிசம்பர் 1987-ல் எம்ஜிஆர் இறந்தபோது சென்னையில் 20 லட்சம் பேர் கூடினர். தமிழகத்தின் குக்கிராமங்களிலிருந்தும் எம்ஜிஆருக்கு இறுதிமரியாதை செலுத்த சென்றனர். இறுதிமரியாதை செலுத்த முடியாதவர்கள் அவரது படத்தை வைத்து அனைத்து சாவு சடங்குகளும் செய்தனர்.



       இந்த புத்தகம் எம்ஜிஆரை மட்டுமே மையப்படுதினாலும் இன்றைய அரசியல் சீர்கேட்டின் ஒட்டுமொத்த பலியையும் எம்ஜிஆரின் மீது மட்டுமே போட்டுவிட முடியாது. திரைப்படத்தில் அனைத்தையும் கதாநாயகனுக்கு தந்துவிட்டு திரைக்குப் பின்னால் இருந்து கதாநாயகனை இயக்குபவர்களை வசதியாக மறந்துவிட கூடாது. திமுகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சரியான காலத்தில் பொருத்தமான ஊடகமாக சினிமா பயன்படுத்தப்பட்டது. ஒரு புதிய அரசியல் இயக்க உருவாக்கம் என்பது மாற்றத்திற்கான திட்டங்களை மக்களிடம் பிரச்சாரப்படுத்தி அதன் மூலம் மக்களை திரட்ட வேண்டும். இதற்கு ஊடகங்கள் மிகவும் முக்கியம். வரலாற்றைப் பார்க்கும் போது புதிய இயக்கங்கள் உருவாக்கத்தில் பத்திரிக்கைகள், பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல திமுக உருவாக்கத்திலும் சினிமா மூலம் முற்போக்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஆனால் கட்சியே முற்போக்கு கருத்துகளைவிட மக்களை கவரும் ஒப்பனை பிம்பங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கட்சிக்கூட்டங்களில் அண்ணா தவறாமல் எம்ஜிஆருக்கு இடமளித்தார். ஆனால் இந்த கதாநாயக முக்கியத்துவத்தை எதிர்த்து கட்சியில் குரல்கள் எழும்பாமல் இல்லை. ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பித்ததற்கு அடிப்படைக் காரணம் கட்சித்தலைமை சினிமாக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான். அன்றிலிருந்து இன்றுவரை சினிமாவையும் தமிழ் சமூகத்தின் அரசியலையும் பிரிக்க முடிவதில்லை. கடவுள் இல்லை, சாதிவேற்றுமை இல்லை, ஆண்பெண் பேதமில்லை என்றெல்லாம் பெரியாரிடம் கற்று வந்தவர்கள் சினிமா என்பது பிம்பமே அது நிஜமல்ல என்பதை மட்டும் ஏனோ மக்களுக்கு சொல்ல மறந்துவிட்டனர். அதன் விளைவை இன்றுவரை தமிழ் சமூகம் எதிர்கொண்டுதான் இருக்கிறது. 

Saturday 30 January 2016

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

மேலிருந்து கீழாகச் சரியும் உயர்கல்வி

ஜெ.பாலசுப்பிரமணியம்


   பல்கலைக்கழகங்கள் என்பவை பலகலைகளைப் பயிற்றுவித்து வெறும் பட்டங்களை வழங்கும் கழகங்கள் மட்டுமல்ல. அது சமூக அக்கறை கொண்ட விமர்சனப்பூர்வமான சமூக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சமூகத்தின் சமநிலையற்றத் தன்மையை மாற்ற துணைபுரியக் கூடியவைகளாகவும், அரசாங்கத்திற்கு சமூகம், அறிவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற துறை சார்ந்த அறிவுரைகளை வழங்கக்கூடிய அறிவுக்கூடாரங்களாகவும் திகழவேண்டும். உலக வரலாற்றில் அரசியல், சமூக மாற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கல்விப்புலம் சாராத சிந்தனையாளர்கள் பலர் நம்மிடையே உண்டு என்றாலும் சிந்தனையின் முதலிடம் அதுதான், சீர்திருத்தத்தின் விருப்பம் அங்குதான் உருவாக்கப்படும், சமத்துவத்தின் குரல் அங்கிருந்துதான் எழும். இதற்காகத்தான் பல்கலைக்கழக வளாகங்களை சுதந்திரமான வளாகங்களாகப் பார்த்துக்கொண்டனர். அங்கு மாணவரகள் ஜனநாயக ரீதியாக தாங்கள் நம்பும் கருத்தியல்களை பரிசோதித்துப் பார்க்கும் களமாக இருக்க வேண்டும். சமூகத்தில் கற்பிக்கப்பட்ட ஆண் பெண் பாலின வேறுபாடுகளை களையும் இடமாக இருக்க வேண்டும். சாதியை நொறுக்கும் தளமாகவும் மதத்தை கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.
தமிழக உயர்கல்வியின் கவலைக்கிடமான நிலை குறித்த ஊடகங்களின் மூலம் ஓரளவு எல்லோரும் அறிந்திருப்பார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. துணைவேந்தர் நியமனங்கள், பேராசிரியர் வேலை நியமனங்கள், முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்விதம், அறிவுத்திருட்டு ஆய்வுகள், தொலைதூரக்கல்வி நிலையங்களில் வழங்கப்படும் அவசர அட்டைகள் (பட்டங்கள்), பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், பல்கலைக்கழகத்தின் மோசமான் நிர்வாகத்தை விமர்சிக்கும் பேராசிரியர்களை பழிவாங்கும் போக்கு இப்படி பல பிரச்சனைகள் குறித்து சமீப காலமாக நாம் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம். என்னதான் நடக்கிறது பல்கலைக்கழகங்களில்.




பல்கலைக்கழக நிர்வாக பதவிகள் அனைத்துமே அரசியல் நியமனங்களைப்போல் நடைபெறுகிறது. இதில் பணம், அரசியல், சாதி என அனைத்து காரணிகளுக்கும் சம பங்குண்டு. இந்த ஊழல் நீரோட்டம் மேலிருந்து கீழ் பாயக்கூடியதாக இருப்பதால் பல்கலைக்கழக துணைவேந்தரிலிருந்து அடிமட்டம்வரை பாய்கிறது. ஆனால் இதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். அதன் விளைவு கல்விப்புலம் என்பது முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாகிப்போனது. அதனால் பல்கலைக் கழகங்களுக்கென விதிக்கப்பட்ட கற்பித்தல், ஆராய்ச்சி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள் போன்ற மரபான பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. சீர்கேடுகளைக் கண்டு  ஜனநாயக வழி அறச்சீற்றம் கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களை எளிதில் அப்புறப்படுத்துவதற்கு (தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ) பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரம் உதவுகிறது. ஏனென்றால் பல்கலைக்கழகங்களின் உயர் நிர்வாகக்குழுவான சிண்டிகேட் உறுப்பினர்கள் துணைவேந்தரை சார்ந்து ஆதாயம் பெறுபவர்களாக இருப்பதால், அவர்கள் கையெழுத்து போடும் எந்திரங்களாக ஆகிப்போனார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக ரீதியான அரசியல் செயல்பாடுகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது. மாணவர், ஆசிரியர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மீறிப் போராடும் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். புதிய தலைமுறை பேராசிரியர்கள் தொழிற்சங்க செயல்பாடுகள் மீது மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருப்பதே சிறந்த பேராசிரியப் பண்பாக வரித்துக் கொண்டுள்ளனர். அதிகாரத்திடம் மக்கள் எதையும் உரிமையாகக் கேட்கக்கூடாது என்ற அரசின் நிலையும், தயவால் மட்டுமே பெற முடியும் என்ற மக்களின் அவநம்பிக்கையும் இணைந்து போராட்ட குணத்தை மங்கிப்போகச்செய்கிறது. இந்த எதிர்ப்பற்ற சூழல் உயர்கல்வியை மேலும் சீரழிவிற்கு தள்ளுகிறது. இந்தப் பேராசிரியர்கள் மத்தியிலே படித்து வெளியேவரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும், கற்பனை செய்து பாருங்கள்.




இன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்விக்காக நாடிவரும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையினர், கிராமத்தினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இவர்கள் வெறும் பட்டம் பெறுபவர்களாக இல்லாமல் உயர்கல்விக்கான அறிவைப்பெற வேண்டும். பிற தனியார் பல்கலைக்கழகங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுடன் போட்டியிடும் தகுதியைபெற வேண்டும். அதற்கு இப்போதைய பல்கலைக்கழக சூழல் நூறு சதவீதம் எதிராகவே உள்ளது. உயர் கல்வியின் சீரழிவை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது அரசின் மாற்றத்தை முடிவு செய்யும் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இல்லை என்றே அர்த்தமாகும். இன்னமும் காலம் இருக்கிறது. இதையெல்லாம்  சரிபடுத்துவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் இன்னும் முழுமையாக சரிந்துவிடவில்லை. ஆனால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும். பணத்திற்கு விற்கப்படும் எந்தப்பதவியும் ஊழலின் உறைவிடமாகவே இருக்கும். பல்கலைக்கழகங்களிலிருந்து, மாணவர், ஆசிரியர், அலுவலர், ஓய்வூதியதாரர், இப்படி எந்தத் தரப்பிலிருந்தும் வரும் புகார்களுக்கு அரசு உடனே செவி சாய்க்க வேண்டும். இன்னமும் மாணவர்களின் மீது அக்கறை கொண்ட பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் அவர்களை துணைவேந்தர்களாக நியமியுங்கள். காட்டு வளத்தை கானுயிர்களில் உணவுச்சங்கிலியின் மேலிருக்கும் புலியை வைத்தே அளவிடுவார்கள். புலி இல்லாத காடு வளமில்லாத காடாகும். ஒரு நாட்டின் வளம் அறிவைக்கொண்டே அளவிடப்படும். அந்த அறிவை உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருப்பதே நாட்டின் வளமாகும்.




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் பாரதிதாசனின் வரிகள் நல்ல குடும்பத்தைக் குறிப்பதற்கு இதுவரை பயன்படுத்தபடுகிறது. ஆனால் இனியும் பயன்படுத்தவேண்டுமானால் தமிழக உயர்கல்விக்கு தேவை தீவிர சிகிச்சை.